காவிரியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை - விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

காவிரியில் தண்ணீர் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Update: 2024-05-20 08:46 GMT

மேட்டூர் அணை (பைல் படம்)

தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி வெளியிட்ட அறிக்கையில்: கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருவது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது. இதனிடையே நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க இயலாது. சம்பா சாகுபடிக்கு மட்டும் அணையை திறக்கலாம் என்று மூத்த வேளாண் வல்லுனர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது.

கர்நாடகா அணைகளில் போதிய அளவுக்கு தண்ணீர் இருந்தும் காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு பல முறை உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்து வருகிறது. திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் தேர்தல் தொடர்பாக கர்நாடகாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் காவிரிநீரை திறந்து விடும்படி கர்நாடகாவிடம் பேசுவார் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

ஆனால் முதல்வர் வாய்திறக்க வில்லை. எனவே இவர்கள் அரசியல் செய்து பிழைப்பு நடத்துவதற்காக தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கின்றனர். மத்திய அரசும் இந்த பிரச்னை குறித்து கண்டுகொள்ளாமல் மவுனம் சாதித்து வருகிறது. குறுவை சாகுபடிக்கு அணை திறக்க இன்னும் 2 வார காலம் மட்டுமே உள்ள நிலையில் தமிழக அரசிடமிருந்தோ அல்லது வேளாண் துறையிடமிருந்தோ இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லாததால் விவசாயிகள் செய்வதறியாமல் உள்ளனர்.

எனவே மத்திய அரசும், தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு காவிரியில் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குறித்த காலத்தில் மேட்டூர் அணை திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News