பேச்சிப்பாறை அணையில் இருந்து கூடுதல் உபரி நீர் வெளியேற்றம்
மாவட்ட முழுவதும் தொடர் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடுதல் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இரவும் இடை விடாது மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. பேச்சிப்பாறையில் நேற்று இரவு மழை வெளுத்து வாங்கியது. காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. திருவட்டார், குலசேகரம்,தக்கலை,இதனால் மாவட்டம் முழுவதும் ரம்யமான சூழல் நிலவி வருகிறது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கி வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்ததையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 1539 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை ஆறு, கோதையாறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.