மழை காரணமாக அதிமுக பொதுக்கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
Update: 2023-11-14 08:36 GMT
தஞ்சாவூரில் நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த அதிமுக பொதுக் கூட்டம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் பேசியதாவது அதிமுக 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தஞ்சாவூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற இருந்த கூட்டம் மழை காரணமாக 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் செவ்வாய்க்கிழமை முதல் தொடர் கன மழை பெய்யும் என்றும், தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி நவம்பர் 16 ஆம் தேதி புயல் சின்னமாக மாறும் எனவும் அறிவித்துள்ளது. எனவே பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதல் பெற்று 16 ஆம் தேதி நடைபெற இருந்த 52 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.