ரசாயன உரங்களில் கலப்படம்: விவசாயிகள் புகார்

காவேரிப்பாக்கம் ஊராட்சியில் விற்கப்படும் ரசாயன உரங்களில் கலப்படம் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-05-21 08:41 GMT

கலப்படம் கலந்த உரம்

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பன்னியூர் கூட்ரோடு பகுதி விவசாயி ஒருவர் அதேபகுதியில் உள்ள ஒரு கடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது நிலத்தில் உள்ள பயிருக்கு ரசாயன உரங்களை வாங்கியுள்ளார்.

பின்னர் விவசாய நிலத்தில் போடுவதற்காக தயார் செய்தபோது சந்தேகம் ஏற்பட்டு உரத்தை பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீர் கலந்து கரைத்து பார்த்தபோது, அதன் அடிப்பகுதியில் எம் சாண்ட் துகள்கள் படிந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உரம் வாங்கிய கடைக்காரரிடம் சென்று இதுகுறித்து கேட்ட போது சரியான தகவல்களை தெரிவிக்காமல்,

கூடுதலாக உர மூட்டையை கொடுத்துள்ளார். அதை விவசாயி ஏற்க மறுத்ததால், கடை உரிமையாளர் உர மூட்டைகளை விவசாய நிலத்தில் எடுத்து சென்று இறக்கி வைத்துள்ளார். பின்னர் ஏற்கனவே கொடுத்த உர மூட்டைகளை கேட்டுள்ளார். ஆனால் விவசாயி தர மறுத்ததால் கடைக்காரர் அங்கிருந்து சென்றுள்ளார்.

இதை அறிந்த அருகில் இருந்த விவசாயிகள் அதே கடையில் வாங்கி வந்த உரத்தை தண்ணீரில் கரைத்து பார்த்த போது இதேபோல் எம் சாண்ட் படிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை அதிகாரிகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரக்கடைகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News