அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்கள் குறித்து ஆலோசனை
கள்ளக்குறிச்சியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Update: 2024-06-26 05:19 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை விபத்து நடக்கும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். அரசு பஸ்சில் ஆபத்தான நிலையில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் மேற்கொள்வதை தடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்கவும், அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து சரிசெய்யவும், சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாவட்டத்தில் ஏற்படும் விபத்துகள், விபத்துக்கான காரணங்கள், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்கள், சாலை பாதுகாப்பு விதிகள், விபத்துளைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களாக 17 இடங்கள் காவல் துறையினரால் அடையாளம் காட்டப்பட்டது. தொடர்ந்து விபத்து நடக்கும் இடங்களாக காவல் துறையினால் அடையாளம் காட்டப்பட்ட இடங்களை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கொண்ட குழுவினர் கூட்டாய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.