அரை நூற்றாண்டு கடந்து,கல்லூரி மாணவர்கள் சந்திப்பு : நாமக்கல்லில் ருசிகரம்
பட்டம் பெற்று 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சி நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டலில் நடைபெற்றது. வேளாண் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களில் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
கோவை வேளாண் பல்கலைக்கழக முதல் பட்டதாரிகள் 52 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து தங்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.கோவையில் செயல்பட்டு வந்த அரசு விவசாயக் கல்லூரி, கடந்த 1971ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகமாகத் தரம் உயர்த்தப்பட் டது. 1968 ஆண்டு விவசாயக் கல்லூரி மாணவர்களாகச் சேர்ந்த 152 பேர், 1972ல் பி.எஸ்சி (அக்ரி) பட்டப் படிப்பை முடித்து, பல்கலைக் கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றனர்.
இந்த முன்னாள் மாணவர்களில் பலர் விவசாயத் துறை நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோராக இருந்ததோடு, பலர் அரசுத்துறை மற்றும் வங்கி அதிகாரிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். ஒரு சிலர், தாங்கள் படித்த வேளாண் பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியர்களாகவும் பணியாற்றியுள்ளனர். பிற்காலத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணிபுரிந்த டாக்டர் முருகேசபூபதியும், அந்த மாணவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள், பட்டம் பெற்று 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சி நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டலில் நடைபெற்றது.
வேளாண் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களில் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அனைவரும் 70 வயதுக்கும் மேற்பட்டோர் என்பதால் பேரன் பேத்திகள் புடைசூழ மகிழ்ச்சியுடன் வந்திருந்தனர். நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை கூறி நலம் விசாரித்துக்கொண்டனர். அனைவரும் தங்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். பின்னர் அனைவரும் கூடி நின்று குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்,நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் கோபிசங்கர், குழந்தைவேலு, ஜெயராமன், ஜனகன், குரு அரங்கநாதன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். பழைய திரைப்படத்தில் ஒரு பாடல் வரிகள் நமது ஞாபகத்துக்கு வருகிறது அந்த பாடல் வரிகள்...அந்த நாள் ஞாபகம் வந்ததே... நெஞ்சிலே.... நண்பனே.... நண்பனே....