பேச்சுவார்த்தையில் உடன்பாடு - காத்திருப்பு போராட்டம் வாபஸ்

குமாரபாளையம் அருகே சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின் வீட்டுமனை கேட்டு காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Update: 2024-02-16 03:04 GMT

சமாதான பேச்சுவார்த்தை 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் கிராம நிர்வாக அலுவலகம்  முன்பு ,அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் துரைசாமி தலைமையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி 60-க்கும் மேற்பட்ட நபர்கள்  தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த மூன்று வருடங்களாக இப்பகுதியில் சேர்ந்த விசைத்தறி   தொழிலாளர்கள், பாத்திரம் தேய்த்து பிழைக்கக் கூடியவர்கள், சலவைத் தொழிலாளர்கள், விதவைகள் என பல்வேறு வகையில் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கும்   98 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி, தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தாலும், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல், நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால், இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு  விரைந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர்  தவமணி, தாசில்தார் சண்முகவேல் மற்றும் வி.ஏ.ஓ. கோவிந்தசாமி , உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டகாரர்களிடம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதில் பல்லக்காபாளையம் பகுதிக்கு உட்பட்ட நான்கு இடங்களில் சர்வே செய்யப்பட்டு, இலவச வீட்டுமனை பட்டா கோரி உள்ள குடும்பங்களை நேரில் சந்தித்து, உறுதி செய்த பிறகு வீட்டுமனை நிலம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என  அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதில் நிர்வாகிகள் பெருமாள், அமிர்தலிங்கம், பழனிசாமி, சக்திவேல், சந்திரமதி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்,

Tags:    

Similar News