இயற்கை விவசாயியை சந்தித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
இயற்கை விவசாயம் பற்றிய வேளாண் கல்லூரி மாணவிகளுடன் ஒரு நாள் பயிற்சி.
Update: 2024-03-28 08:49 GMT
தஞ்சாவூர் அருகே மஹர்நோன்புச் சாவடியில், தஞ்சை ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் அனுபவப் பணித் திட்டத்தின் ஒரு பகுதியாக இயற்கை விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது அப்பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயியான கோ.சித்தர், இயற்கை விவசாயி மற்றும் அலோபதி மருத்துவராகவும் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ்நாட்டின் இயற்கை விவசாயிகளுக்கான விருதான நம்மாழ்வார் விருதை 2023-24 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசிடம் பெற்று இருக்கிறார். இயற்கை விவசாயி கோ.சித்தர், வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடும் பொழுது, இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட வேளாண் பொருட்களைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். மேலும், அவர் 25 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயம் செய்து கொண்டிருப்பதாகவும், அதில் என்னென்ன பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மீன் வளர்ப்பு, அதில் வரும் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்துவது குறித்தும் விளக்கிக் கூறினார். இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், மீன் அமிலம், மண்புழு உரம், அமிர்த கரைசல், சூடோமோனாஸ் குலரசன்ஸ், வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் கன ஜீவாமிர்தம் எவ்வாறு உற்பத்தி செய்வது மற்றும் அவைகளைக் கொண்டு விவசாயம் செய்வதினால் நஞ்சில்லா உணவு கிடைப்பது குறித்தும் விளக்கிக் கூறினார். மேலும் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் அதன் மருத்துவ குணத்தையும் விளக்கி கூறினார். இயற்கை முறையில் சாகுபடி செய்யும் முறையையும் அதில் உள்ள நன்மைகள் மற்றும் இயற்கை விவசாய அனுபவங்களை மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டார்.