அகர ஆதனூர் புற்றடி மாரியம்மன் ஆலய தீ மிதி திருவிழா
மயிலாடுதுறை அருகே புற்றடி மாரியம்மன் திருக்கோயில் 88 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.
Update: 2024-05-18 04:10 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அகர ஆதனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு புற்றடி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. கோவிலின் 88 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா விழா கடந்த 3 ஆம் தேதி பூச்சொரிதலுடன் காப்பு கட்டி துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு கிராமவாசிகளால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. 15ஆம்நாள் திருவிழாவான தீமிதி திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. பெரிய குளக்கரையிலிருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் புறப்பட்டு விரதமிருந்த பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் சக்திகரகம் இறங்கியது. தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பெண்கள் மாவிளக்கு படையலிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.