போதையில் ரயிலை நிறுத்தி தகராறு செய்த வாலிபர்கள் - ஒருவர் கைது

நாகர்கோவில் அருகே போதையில் ரயிலை நிறுத்தி தகராறு செய்த வாலிபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டான்.

Update: 2024-06-18 07:41 GMT

நாகர்கோவில் அருகே போதையில் ரயிலை நிறுத்தி தகராறு செய்த வாலிபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டான்.


கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து குமரி மாவட்டம்  நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி வழியாக தினமும் அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை இந்த ரயில் ஆரல்வாய் மொழியை கடந்து காவல் கிணறு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் இருந்த இரண்டு பேர் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஒருவர் திடீரென சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தினார்.      

பின்னர் ரயிலில் இருந்து கீழே இறங்கியும் தகராறு நீடித்தது. கற்களை கொண்டு எறிந்து தகராறு செய்தனர். இதில் ரயில் மீதும் கற்கள் வீசப்பட்டன. ரயில் பாதியில் நின்ற தகவல் அறிந்ததும் குறிப்பிட்ட பெட்டிக்கு லோகோ பைலட்டும், கார்டும்  வந்து பிரேக்கை விடுவித்தனர்.       அந்த சமயத்தில் தகராறு செய்தவர்களில் ஒருவர் தப்பி ஓடினார். மற்றொரு வாலிபரை பொதுமக்கள் பிடித்து ரயில்வே கார்டிடம் ஒப்படைத்தனர். பின்னர் ரயில் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. பிடிபட்ட நபரை திருநெல்வேலி ரயில் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தனர்.      

பின்னர் ரயில்வே போலீசார் அந்த வாலிபரை நாகர்கோவில் அழைத்து வந்தனர். விசாரணையில் அவர் திருவட்டாறு பகுதியை சார்ந்த விவின் (23) என்பது தெரிய வந்தது அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் தகராறு செய்த வாலிபர் யார் என்பது தெரியவில்லை. தகராறு செய்து தப்பிய வாலிபர் தான்  சங்கிலி பிடித்து நிறுத்தியவர் என்று கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News