பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத்தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத்தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவினை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான இணையவழி கணினி முறை குலுக்கல் பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவரும் மாவட்ட ஆட்சியருமான.கற்பகம், தலைமையில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் ராஜேந்திர குமார் வர்மா, முன்னிலையில் நடைபெற்றது.
நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவினை கண்காணிக்க தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில், பெரம்பலூர் சட்டமன்றத்தொகுதியில் 15 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்டமன்றத் தொகுதியில் 28 வாக்குச்சாவடி மையங்களும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவினை கண்காணிக்க தேர்தல் நுண் பார்வையாளர்களாக பெரம்பலூர் சட்டமன்றத்தொகுதிக்கு 15 நபர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு 28 நபர்களும் என மொத்தம் 43 நபர்களில் யார் யார் எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்திடும் வகையில், அவர்களுக்கான இணையவழி கணினி முறை குலுக்கல் பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம், தலைமையில்,பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் ராஜேந்திர குமார் வர்மா, முன்னிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வைத்தியநாதன், விஜயா தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் அருளானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.