படித்த பள்ளிக்கு ரூ. 2.5 லட்சத்தில் கணினி வழங்கிய முன்னாள் மாணவர்கள்
முகையூர் அருகே முன்னாள் மாணவர்கள் ரூ.2.5 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு கணினி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
விழுப்புரம் மாவட்டம் முகையூர் அருகே உள்ளது கொடுங்கால் கிராமம். இந்த கிராமத்தில் இயங்கும் ஆர்.சி நடுநிலைப் பள்ளியில் கடந்த 1996 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு பயின்று முடித்த மாணவர்களின் சார்பில் இன்று மாணவர்கள் சந்திப்பு மற்றும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 8 கணினி மற்றும் பேட்டரி இன்வெர்ட்டர் ஆகியவைகள் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
அவற்றை பள்ளியின் பங்கு தந்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், முன்னாள் மாணவர்கள் 40 பேர் ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர். மேலும், தங்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியருக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது உருவம் பொறித்த தபால் தலை மற்றும் அவருக்கு பணத் தாள்களை கொண்டு பொக்கே அன்பளிப்பாகவும் வழங்கி மகிழ்ந்தனர்.