சமூக விரோதிகளின் கூடாரமான மேல்நிலை குடிநீர் தொட்டி

ஐயப்பன் நாயக்கன்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி அருகே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-24 06:29 GMT

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, ஐயப்பன் நாயக்கன்பட்டியில்,அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி அருகே, பயனற்ற நிலையில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி ஒன்று உள்ளது . இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படாத நிலையில், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் சூழ்நிலை உள்ளது .

இந்த தொட்டியின் உள்பகுதியில் சமூக விரோதிகள் மற்றும் மது பிரியர்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் கும்பலாக அமர்ந்து மது அருந்துவதும் கஞ்சா மற்றும் போதை வஸ்துகளை பயன்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அருகிலேயே அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளதால், அங்கு படிக்கும் மாணவிகளை போதை ஆசாமிகள் தொந்தரவு செய்வதும் ஆசிரியர்களை தங்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பதுமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது . இது குறித்து, இங்குள்ள பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும்,போதை ஆசாமிகள் மாணவர்களுக்கும் போதை பழக்கத்தை கற்றுத் தரும் அபாய நிலை உள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என, பொதுமக்கள் பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர். காவல்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்து , பராமரிப்பு இல்லாத மேல்நிலைநீர் தேக்கதொட்டியை அப்புறப்படுத்தி மாணவரின் நலனை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலையிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News