அஞ்சூர் அரசு பள்ளியில் 100% தேர்ச்சி: அதிகாரி வாழ்த்து
அஞ்சூர் அரசு பள்ளியில் 100% தேர்ச்சி அடைந்ததை தொடர்ந்தது அதிகாரி வாழ்த்து தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்துார் ஒன்றியம், அஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ -- மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலருமான சமயமூர்த்தி,
அப்பள்ளிக்கு நேரில் சென்று, மாணவ - - மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்து, புத்தகங்களை பரிசாக வழங்கினார். அப்போது, பள்ளிக்கு கூடுதலாக நான்கு வகுப்பறைகள், கலையரங்கம் கட்டித்தர வேண்டும்; சென்னேரி, அனுமந்தபுரம், அஞ்சூர் வழியாக அரசு பேருந்து இயக்க வேண்டும்; காலியாக உள்ள இரவு காவலர், துாய்மை பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, வில்லியம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தார்.
பின், ரெட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து, மருந்துகள் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்தும் கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குவது குறித்தும், மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, கிராம மக்கள், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆய்வின் போது, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், துணை ஆட்சியர் நாராயணசர்மா, கூடுதல் ஆட்சியர் அனாமிகா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.