தஞ்சாவூர் குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ விபத்து !
தஞ்சாவூர் குப்பைக் கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் ஒரே வாரத்தில் மீண்டும் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பரவும் புகையால் சுற்றியுள்ள பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர். தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகேயுள்ள ஜெபமாலைபுரத்தில் உள்ள இந்தக் குப்பைக் கிடங்கில், மாநகரில் 51 வார்டுகளிலும் நாள்தோறும் சேகரிக்கப்படும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இக்கிடங்கில் ஜூன் 27 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுற்றியுள்ள பகுதிகளுக்கு புகை பரவியதால், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். நெருப்பு அணைக்கப்பட்ட நிலையில், மீண்டும் புதன்கிழமை முற்பகல் தீ பற்றி எரிந்தது. தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், மாநகராட்சி நிர்வாகத்திலிருந்து 3 தண்ணீர் லாரிகளில் பணியாளர்கள் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், அப்பகுதியிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் புகை பரவியதால், நடந்து சென்றவர்களும், வாகன ஓட்டுநர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மேலும், அப்பகுதிகளில் வசிப்பவர்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். மாநகராட்சி பணியாளர்களும், தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.