குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின பேரணி
அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
அரியலூர், ஜூன் 24- குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, அரியலூரில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மற்றும் மாவட்ட பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. அரியலூர் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியானது, அரியலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜர் திடலில் முடிவடைந்தது.
பேரணியில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். பேரணியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) சாமி முத்தழகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) செல்வராசு, வட்டாட்சியர் ஆனந்தவேல் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.