ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுகோள்!
நீலகிரியில் துப்பாக்கி உரிமம் பெற்று பயன்படுத்துபவர்கள் உடனடியாக ஆயுதங்களை ஒப்படைக்க தேர்தல் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Update: 2024-03-20 11:45 GMT
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக, உரிமம் பெற்று துப்பாக்கி பயன்படுத்துபவர்கள், தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், " நீலகிரி மாவட்டத்தில் உரிமம் வாங்கி துப்பாக்கி பயன்படுத்தி கொள்ள 420 பேர் அனுமதி வாங்கி உள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒரு வாரத்திற்குள் தங்களுடைய ஆயுதங்களை அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது அங்கீகாரம் பெற்ற படைக்கலன் பாதுகாப்பு பிரிவில் ஒப்படைக்க வேண்டும். தற்போது வரை ஒரு சிலர் மட்டுமே ஒப்படைத்துள்ளனர்," என்றனர்.