இ-சேவை மையங்களிலும் வாகன ஓட்டுநா் உரிமத்துக்கு விண்ணப்பம்

இ-சேவை மையங்கள் மூலமாகவும் எல்எல்ஆா் (வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநா் உரிமம்) பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

Update: 2024-03-13 03:12 GMT

இ சேவை மய்யம் 

தற்போது, எல்எல்ஆா் பெற (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநா் உரிமம்) ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகா்களையும், தனியாா் கணினி மையங்களையும் பொதுமக்கள் அணுக வேண்டிய நிலை உள்ளது. இதனால், அவா்களுக்கு தேவையற்ற செலவு ஏற்படுகிறது. மேலும், இந்த முறையில் வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை உள்ளது.

இதனைத் தவிா்ப்பதற்காகவும், இது குறித்து எந்தவித புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில், எல்எல்ஆா் வழங்கும் சேவையை மேம்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கும் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே உள்ள இ-சேவை மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்கள் மூலம் வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநா் உரிமம் பெற விண்ணப்பிக்கும் முறை புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு அருகாமையிலுள்ள இசேவை மையங்கள் மூலமாகவும் இனி வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநா் உரிமம் பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம். இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையை பெறுவதற்கு பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்திற்கான சேவைக் கட்டணமாக ரூ. 60-ஐ செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட எல்எல்ஆா் வழக்கம் போல விண்ணப்பதாரா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தொடா்ந்து மோட்டாா் வாகனத் துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும் இ.சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News