ஜப்பான், ஜெர்மன் நாட்டு மொழியை கற்றுக்கொள்ள விண்ணப்பிக்கலாம்
ஜப்பான், ஜெர்மன் நாட்டு மொழியை கற்றுக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வெளி நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து, வெளிநாட்டில் செவிலியர்களை பணியமர்த்தம் செய்ய பல்வேறு நாடுகளில் ஆட்சேர்ப்பு நிறுவனங்களை தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, முதன் முறையாக வெளிநாட்டில் செவிலியர் பணிக்கு செல்ல விரும்பும் தகுதியுடைய செவிலியர்களுக்கு அந்நாட்டு மொழிகளை கற்றுக்கொள்ள இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஜப்பான், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் மொழிகள் இலவசமாக ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பயிற்றுவிக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04575 240435 மற்றும் 04575 245225 என்ற தொலைபேசிஎண்களின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.