அரவக்குறிச்சி: வீட்டின் கதவை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, சேவியர் தெருவில் வசித்து வருபவர் ஜான் பிலிப்ஸ்.58. இவர் அரவக்குறிச்சி பத்திரப்பதிவு அலுவலகம் அருகே கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 9 அன்று, உடல்நிலை சரியில்லாத தனது உறவினரை பார்க்க சென்னை சென்றுள்ளார். மீண்டும் அவர் டிசம்பர் 10-ம் தேதி இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் பீரோவில் வைத்திருந்த ௨௯ பவுன்தங்க நகை திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக ஜான் பிலிப்ஸ் அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவம் நடந்த வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் குற்றவாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். மேலும், இது தொடர்பாக அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து நகைகளை களவாடி சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.