எளிதில் தீப்பற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா?போலீசார் ஆய்வு

ஏற்காடு மலைக்கு செல்லும் வாகனங்களில் போலீசார் சோதனை செய்தனர்.

Update: 2024-03-15 10:11 GMT

சோதனையில் ஈடுபட்ட போலீசார்

சேலம்: எளிதில் தீப்பற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து ஏற்காடு செல்லும் வாகனங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சேர்வராயன் கோவில் உள்பட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து செல்கின்றனர். கோடை காலம் தொடங்கி உள்ளதையொட்டி, ஏற்காடு மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதைதடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில், ஏற்காடு வனப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருக்கிறதா? எனவும், மரங்களுக்கு யாரேனும் தீ வைக்கிறார்களா? என வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஏற்காட்டுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதுவும் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை அடிவாரம் பகுதியில் போலீசார் நின்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அரசு மற்றும் தனியார் பஸ்களை தவிர சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு செல்லும் கார், வேன் உள்பட சுற்றுலா பயணிகளின் வாகனங்களை போலீசார் தீவிரமாக சோதனை செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். அவ்வாறு ஒருசில வாகனங்களில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருந்ததை போலீசார் பார்த்து அவற்றை அப்புறப்படுத்தினர்.

மேலும் வனங்களையும், அதை சார்ந்த பகுதிகளையும் பாதுகாக்க முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News