திருப்பூரில் பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ் இயக்கப்படுகிறதா?விடிய விடிய அதிகாரிகள் சோதனை!

திருப்பூரில் பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ் இயக்கப்படுகிறதா என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-21 05:20 GMT

அதிகாரிகள் சோதனை

திருப்பூரில் பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறதா? என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பிற மாநில பதிவு எண்கள் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்க கூடாது.

அவ்வாறு இயக்கினால் அந்த பஸ்களை சிறை பிடிக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் புஷ்பா சந்திப்பு பகுதியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயா தலைமையில்  இரவு முதல் காலை வரை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  இதுபோல் அவிநாசி மற்றும் பல்லடம் புறவழிச் சாலை பகுதிகளில் வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் மற்றும் ஆய்வாளர் நிர்மலா தேவி ஆகியோர் தலைமை குழுவினர் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் கூறியதாவது:& தமிழ்நாட்டில் முறையாக 1535 ஆம்னி பஸ்கள் இயங்கி வருவதால் பொதுமக்களுக்கு இதனால் எந்தவித இடர்பாடும் ஏற்படாது. பயணிகள் யாராவது விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநில ஆம்னி பஸ்களில் இருந்து இறக்கி விடப்பட்டால், மாற்று ஏற்பாடாக அவர்களின் ஊர்களுக்கு கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன.

இது குறித்து அந்தந்த மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தொடர்புடைய தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலர்களுடனும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களையும் தொடர்புகொண்டு உரிய மாற்று நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அகில இந்தியா சுற்றுலா அனுமதி சீட்டு பெற்று, அகில இந்தியா சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை. அகில இந்தியா சுற்றுலா அனுமதி சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News