கோனேரிராஜபுரம் - நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

குத்தாலம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் 8.5 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய வடிவமாக திகழும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது

Update: 2023-12-27 08:58 GMT

கோனேரிராஜபுரத்தில் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய நடராஜப் பெருமான் . மிகப் பெரிய வடிவமாக எட்டரை அடி உயரம் கொண்டு, நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார். திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது. திருவாதிரை திருநாளை முன்னிட்டு அதிகாலை ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெற்றது.

அதிகாலை 3.30 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு தேகசௌந்தரி அம்பாள் உடனுறை நடராஜ பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், சர்க்கரை, தேன், பழவகைகள் கொண்டு சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து திராட்சை மாலை, நகைகள், உத்திராட்சமாலை, வண்ணமலர் மாலைகள், புலித்தோல் பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு யாகசாலையில் இருந்து ரட்சை பெற்று வைக்கப்பட்டு சோடஷ உபச்சாரம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க மகாதீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. பூஜைகளை சதாசிவம் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News