அசலியம்மன் கோவில் பராமரிக்கப்படாத குளத்தால் பொதுமக்கள் வேதனை !
மதுராந்தகம் அருகே அசலியம்மன் கோவில் குளத்தை பராமரித்து நடைபாதை பூங்கா அமைத்து தர கோரிக்கை.
By : King 24x7 Angel
Update: 2024-02-24 09:09 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், கீழவலம் ஊராட்சிக்கு உட்பட்ட அசலியம்மன் கோவில் குளம் முழுதும் ஆகாயத்தாமரை மற்றும் புற்கள் வளர்ந்து, பாசி படர்ந்து உள்ளது. மேலும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது. தண்ணீர் தெரியாத வண்ணம் ஆகாயத் தாமரை படர்ந்துள்ளதால், கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ளது. குளக்கரையை சுற்றி முட்புதர் வளர்ந்து, புதர்மண்டி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய அசலியம்மன் கோவில் குளம், தற்போது பயன்பாடின்றி உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நீராதாரத்தை காக்கும் பொருட்டு, குளத்தில் உள்ள புற்கள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலையோரம் குளம் உள்ளதால், குளக்கரையை சுற்றி நிழல் தரும் மரங்கள் அமைத்து, நடைபாதை பூங்கா ஏற்படுத்தித் தர வேண்டும். எனவே, குளத்தின் உட்பகுதியை சீரமைத்து, குப்பைக் கழிவுகளை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.