வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் உதவி தேர்தல் அலுவலர் ஆய்வு
கருப்பூர் பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் உதவி தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதியின் சேலம் தெற்கு சட்டசபை தொகுதி வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்படுகிறது. அங்கு தெற்கு சட்டசபை தொகுதிக்கான எந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறையை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது, சேலம் நாடாளுமன்ற தொகுதியின் சேலம் தெற்கு சட்டசபை தொகுதியில் நாளை வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் தொடர்புடைய ஆவணங்களை வாக்குப்பதிவு மையத்தில் இருந்து கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்படும்.
அவ்வாறு எடுத்து வரப்படும் பொருட்கள் வரவேற்பு அறையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களிடம் இருந்து மண்டல அலுவலர் பெற வேண்டும். அவ்வாறு பெறப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அதன் தொடர்புடைய அலுவலர் சரிபார்த்து பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும். வரவேற்பு அறை, சாமியானா, மேஜை, மின்சார இணைப்பு, குடிநீர் வசதி, ஒலிபெருக்கி, தீ தடுப்பு சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.