இளம்பிள்ளையில் காலாவதி கேக் விற்ற பேக்கரியில் அதிகாரிகள் ஆய்வு
இளம்பிள்ளையில் காலாவதி கேக் விற்ற பேக்கரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு செய்தனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை காடையாம்பட்டி பிரிவு ரோட்டில் உள்ள பேக்கரியில் காலாவதியான கேக் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த பேக்கரி கடையில் வீரபாண்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கிய பிரபு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கேக் தயார் செய்து வைக்கப்படும் குளிர்சாதன பெட்டி உரிய பராமரிப்பின்றி சரியான வெப்பநிலை பயன்பாட்டில் இல்லாதது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு தயார் செய்யப்பட்டிருந்த கேக் மாதிரிகளை எடுத்து உணவு பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு, உணவு சேமிப்பு அறை, பூச்சி தடுப்பு முறைகள்,
குடிநீர் ஆய்வறிக்கை ஆகியவற்றின் குறைபாடுகள் குறித்து விளக்கம் கேட்டும், தயாரிப்பு தேதி இல்லாத உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தி சூடான உணவு பொருட்களை விற்பனை செய்ததற்காக கடையின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் பேக்கரியும் தற்காலிகமாக மூடப்பட்டது.