பேக்கரி உரிமையாளரை கொலை செய்ய முயற்சி
திருப்பூர், நாச்சிபாளையத்தில் பேக்கரி உரிமையாளரை கத்தியால் குறித்து கொலை செய்ய முயற்சித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் ( 38 ). அதே பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார்.திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மகன் நிகுல் ராஜ்(28). கடந்த 20 வருடங்களாக நாச்சி பாளையத்தில் தங்கி வருகின்றனர்.
நிகுல்ராஜூக்கு மனநிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக 6 வருடங்களாக மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த சில தினங்களாக நாச்சிபாளையம் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார். நாச்சிபாளையத்தில் உள்ள கோபாலகிருஷ்ணனின் பேக்கரிக்கு சென்றுள்ளார்.
அப்போது கோபாலகிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் நிகுல்ராஜ் பேக்கரியில் வைத்திருந்த கத்தியை எடுத்து கோபாலகிருஷ்ணனின் கழுத்தில் குத்தியுள்ளார். கோபாலகிருஷ்ணனுக்கு ரத்தம் அதிகம் வெளியேறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிகுல்ராஜை பிடித்த பொதுமக்கள் கை , கால்களை கட்டி தர்ம அடி கொடுத்தனர். அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நிகுல்ராஜ் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும் , தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது. நிகுல்ராஜை வீட்டிற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் பெற்றோரிடம் எச்சரிக்கை செய்து ஒப்படைத்தனர்.
மீண்டும் மனநல காப்பகத்திற்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்து காப்பகத்திற்கு தகவல் அளித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.