நகை பறிப்பில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் கைது
அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயிலில் வந்த பெண்ணிடம் நகை பறித்த திருவள்ளூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர் .
திருவாரூர் மாவட்டம்,கொரடாச்சேரி பெருமாள் நகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மனைவி அபிராமி (41). இவர் சென்னை ஆவடியில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து கடந்த 11-ந் தேதி குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றார்.
அங்கு சாமி தரிசனம் செய்தபின் ஆவடிக்கு புறநகர் ரயிலில் வந்து கொண்டிருந்தார். ரயிலில் இருக்கைகள் காலியாக இருந்ததால் அபிராமி படுத்தவாறு பயணம் செய்தார். அரக்கோணம் ரயில் நிலையத்திற்குள் வருவதற்கு முன் சிக்னலுக்காக ரெயில், நின்றது.
அப்போது இருக்கையில் படுத்திருந்த அபிராமி, கழுத்தில் அணிந்திருந்த சுமார் 7½ பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென அறுத்துக் கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.
இது குறித்து அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்தில் அபிராமி புகார் அளித்தார். அதன் பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் நேரு நகரைச் சேர்ந்த நாகராஜ் (வயது 35), ஆட்டோ டிரைவர் என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 11 பவுன் நகையை மீட்ட போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.