இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி- எஸ் பி தொடங்கி வைத்தார்
விருதுநகரில் இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியை எஸ்.பி தொடங்கி வைத்தார்.
விருதுநகரில் இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்தார். இந்த பேரணியானது விருதுநகர்- சாத்தூர் சாலை கருமாதி மடம் எம்ஜிஆர் சிலையில் இருந்து துவங்கி முனிசிபல் ஆபீஸ் ரோடு, தெப்பம், மெயின் பஜார், தேசபந்து மைதானம் வழியாக பழைய பேருந்து நிலையம் அருகே முடிவுற்றது.
மேற்படி பேரணியில் இணையவழி குற்றங்கள், செல்போன் பயன்டுத்துவதில் கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும், ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP), தொடர்பான குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், போலியான கடன் செயலிகள் (Loan App), போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி கணக்குகளில் நடைபெறும் மோசடிகள், முக்கியமாக பட்டதாரி இளைஞர்களை குறி வைக்கும் பகுதி நேர வேலை மோசடி ஆகியவை குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பவித்ரா, உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மீனா, உதவி ஆய்வாளர்கள் காவல் ஆளிநர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என சுமார் 350 நபர்கள் கலந்து கொண்டனர். மேலும் இணையவழி குற்றங்கள் தொடர்பான உதவிக்கு சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 ல் புகார் அளிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்