கொலை வழக்கு ஜாமீன் மனு தள்ளுபடி
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வனத்துறையினர் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வனத்துறையினர் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவு. தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி வண்ணாத்தி பாறை அருகே உள்ள வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் பலியானார்.
ஈஸ்வரனின் குடும்பத்தார் உயர் நீதிமன்றத்தை நாடி ஈஸ்வரன் சுடப்பட்ட சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் எனவும், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் எனக் கூறி அவரது உறவினர்கள் வழக்கு தொடுத்தனர். இந்நிலையில் வனத்துறை அதிகாரிகளால் சுடப்பட்டு உயிரிழந்த விவசாயி ஈஸ்வரன் சம்பவத்தில் மதுரை உயர் நீதிமன்றம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உரிய விசாரணை நடத்தி கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து விவசாயி ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கூடலூர் வனச்சரக அதிகாரி திருமுருகன் மற்றும் வனவர் ஜார்ஜ் என்ற பென்னிகுட்டி ஆகிய இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் உள்ள வனச்சரகர் திருமுருகன் மற்றும் வனவர் ஜார்ஜ் தரப்பில் தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த பொழுது அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில் விவசாயி துப்பாக்கிச் சூட்டில் பலியான சம்பவம் குறித்து புலன் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணை அறிக்கை முழுமையடைந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத நிலையில் ஜாமீன் மனு வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி திருமதி அறிவொளி விவசாயி துப்பாக்கி சூட்டில் விவசாயி பலியான கொலை வழக்கில் சிறையில் உள்ள வனச்சரக அதிகாரி மற்றும் வனவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.