மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பேனர்கள்

நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள அரசு ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளியை சுற்றி பல்வேறு பேனர்கள் வைக்கப்படுவதால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-06-30 03:47 GMT

பள்ளியை சுற்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள்

செங்கல்பட்டு மாவட்டம்,நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில், அரசு ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி, நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் உள்ளது. இந்த சாலையில், கூடுவாஞ்சேரியில் இருந்து பாண்டூர், திருப்போரூர் வழியாக மாமல்லபுரம் வரை, அதிக அளவிலான வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இந்த பள்ளியின் அருகில், மிகவும் ஆபத்தான முறையில், அடிக்கடி விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன.

திருமண விழா, கண்ணீர் அஞ்சலி, கோவில் திருவிழா, அரசியல் போன்ற நிகழ்ச்சிகளின் போது, இப்பள்ளி வளாகம் விளம்பர பேனர்களால் சூழப்படுகிறது. மேலும், கனரக வாகனங்கள் செல்லும் போது, காற்றின் வேகத்தில் பேனர்கள் ஆட்டம் காண்கின்றன. அவை எப்போது வேண்டுமானாலும் அப்பகுதியில் நடமாடும் மாணவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்படும் ஆபத்துள்ளது.

இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கூறியதாவது: இப்பகுதியில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும், இந்த பள்ளி அருகில் விளம்பர பேனர்கள் வைப்பதை வழக்கமாக வைத்து உள்ளனர். பள்ளியின் சுற்றுச்சுவர் முழுதும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பேனர்களால், பள்ளி மாணவர்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி, நடைபாதை முழுக்க ஆக்கிரமித்து வைக்கப்படும் பேனர்கள், பள்ளிக்கு நடந்து வரும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியருக்கு இடையூறாக உள்ளன. எனவே, பள்ளி அருகில் பேனர் வைப்பதற்கு தடை விதிக்கவும், ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றவும், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News