சாரண இயக்க ஆசிரியர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம்
திருச்செங்கோட்டில் சாரண இயக்க ஆசிரியர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சாரண மாவட்டங்களைச் சார்ந்த சாரண இயக்கப் பொறுப்பாசிரியர்களுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் லட்சுமி அம்மாள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் 22.04.2024 முதல் 28.04.2025 வரை ஏழு நாட்கள் நடைபெற்றுவருகிறது.
துவக்க விழாவில் முகாம் செயலர் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட ஆணையர்(குருளையர்) மிராஸ்கரிம் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை ஆணையர் ப.மகேஸ்வரி முகாமினை காணொளி வாயிலாகத் துவக்கி வைத்தார். பள்ளியின் தலைமையாசிரியர் கமலசுந்தரி முன்னிலை வகித்தார். சாரண சாரணீயர் இயக்கத்தின் சாரணர் பிரிவில் உள்ள ஐந்து முதல் 10 வயது வரையுள்ள மாணவர்களுக்கான குருளையர் மற்றும் நீலப்பறவையர் ஆசிரியர்களுக்கான இப்பயிற்சி முகாமில் சுமார் 64 பேர் கலந்து கொண்டனர்.
முகாமினை தேசியத் தலைமையகப் பாடத்திட்டத்தின் படி நடத்தப்பட்டு வரும் இம்முகாமினை தேசிய அளவிலான பயிற்றுனர்கள் கார்த்திகேயனி, கலைவாணி ஆகியோர் முகாம் தலைவர்களாக இருந்து முகாமினை சிறப்பாக நடத்தினர். மாவட்டக் கல்வி அலுவலர்கள் பாலசுப்ரமணியம் (தொடக்கக்கல்வி),க.விஜயன் (இடைநிலைக்கல்வி)(பொ), கணேசன் (தனியார் பள்ளிகள்), மாவட்டச்செயலர் சி.ரகோத்தமன் ஆகியோர் காணொளி வாயிலாக வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத்துணைத்தலைவர் தி.ம.சிவசிதம்பரம் சிறப்புரையாற்றினார். மாவட்ட அமைப்பு ஆணையர் விஜயகுமார் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை , மாவட்ட பயிற்சி ஆணையர்கள் க.பாலசுப்ரமணியம், இரா.கவிதா, ப.ஜெயந்தி, மாவட்ட உதவிச்செயலர் தீபக், உதவித்தலைமையாசிரியை யாழ்மொழி ஆகியோர் அடங்கிய குழு சிறப்பாகச் செய்திருந்தது.