திருப்புவனத்தில் வீணாகி வரும் பேட்டரி வாகனங்கள்

திருப்புவனத்தில் துப்புரவு பணிக்காக வாங்கப்பட்ட வாகனங்கள் வீணாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2024-05-27 12:00 GMT

திருப்புவனத்தில் துப்புரவு பணிக்காக வாங்கப்பட்ட வாகனங்கள் வீணாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருப்புவனம் பேரூராட்சியில் துப்புரவு பணிக்காக வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் கடந்த இரு மாதங்களாக வீணாகி வருகின்றன. திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதுதவிர திருமண மகால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பெட்டி கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கடைகளும் செயல்பட்டு வருகின்றன. திருப்புவனம் பேரூராட்சியில் இரண்டு மேஸ்திரிகள் தலைமையில் 20 நிரந்தர தூய்மை பணியாளர்களும், 80 தற்காலிக பணியாளர்களும் பணியாற்றுகின்றனர்.

தினசரி ஏழரை டன் குப்பை அள்ளப்படுகின்றன. திருமணம், திருவிழா உள்ளிட்ட விசேஷ நாட்களில் இது இருமடங்காக உயரும், தினசரி தெருக்களில் குப்பைகளை சேகரிக்க தள்ளுவண்டிகளும், தெருக்களில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகளை சேகரிக்க டிராக்டர், மினி சரக்கு வேன்களும் பயன்படுத்தப்படுகின்றன. தள்ளுவண்டிகள் மூலம் குப்பைகளை அள்ளி வர மிகவும் தாமதம் ஆகி வருவதால் இதனை தவிர்க்க பேரூராட்சி பகுதிக்கு ஒவ்வொரு வார்டிற்கும் ஒருபேட்டரி வாகனம் வாங்கப்பட்டது.

ஒரு வண்டி இரண்டே முக்கால் லட்ச ரூபாய் என்ற கணக்கில் மொத்தம் 16 வண்டி கடந்த இரு மாதங்களுக்கு முன் வாங்கப்பட்டு கோட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டி வளாகத்தில் நிறுத்தப்பட்டது. வாகனங்களை நிறுத்த ஷெட் போன்ற எந்த வித வசதியும் இன்றி வீணாகி பயன்படுத்தப்படாமல் வீணாகி வருகிறது.

Tags:    

Similar News