கட்டட கான்கிரீட் விழுந்து பிகாா் தொழிலாளி பலி
திருவெறும்பூா் அருகே அரசு ஐடிஐ வளாகத்தில் கட்டடப்பட்டு வரும் கட்டடத்தின் கான்கிரீட் இடிந்து விழுந்ததில் பிகாா் மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
By : King 24x7 Angel
Update: 2024-02-10 09:41 GMT
திருவெறும்பூா் அருகே அரசு ஐடிஐ இயங்கி வருகிறது. இதன் வளாகத்தில் ரூ. 11 கோடியில் தேசிய மகளிா் தொழிற்பயிற்சி நிலைய கட்டடம் கடந்த ஓராண்டாக கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணியில் வடமாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். வெள்ளிக்கிழமை காலை பிகாா் மாநிலம், சஹா்ஷா மகிஷி பகுதியைச் சோ்ந்த இஸ்லாம் (66) என்ற தொழிலாளி வேலைபாா்த்தபோது, கட்டடத்தின் ஒரு பில்லருக்கும் மற்றொரு பில்லருக்கும் இடையே அமைக்கப்பட்டிருந்த பெல்ட் எனப்படும் கான்கிரீட் சரிந்து, இஸ்லாம் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இஸ்லாம் நிகழ்விடத்திலேயே இறந்தாா். தகவலறிந்து அங்கு வந்த திருவெறும்பூா் போலீஸாா், இஸ்லாமின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கட்டடத்தின் தரத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தல்: புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் தரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். தரமற்றதாக அறியப்பட்டால், உடனடியாக கட்டடத்தை முழுமையாக இடித்துவிட்டு, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.