இருசக்கர வாகனத் திருட்டு: ஆட்டோ டிரைவர் கைது
காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து வரும் நபர்கள், தங்கள் இருசக்கர வாகனங்களை பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்திவிட்டு, தங்கள் தொழிற்சாலை மற்றும் அரசு பணிகளுக்கு செல்கின்றனர்.
இது மட்டும் இல்லாது வீடுகளில் போதிய வாகன இடவசதி இல்லாததால் சாலைகளில் நிறுத்தியும் இரவு நேரங்களில் நிறுத்தி வைத்து இருக்கும் நிலையில் வாகன திருட்டுகள் அதிகம் நடைபெறுவதாக காவல்துறைக்கு தொடர்பு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் முரளி ஆலோசனையின் பேரில், சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டும், மாநில மற்றும் பல்வேறு பகுதியில் அமைந்துள்ள சிசிடிவிகளை ஆராய்ந்து வந்தனர்.
இந்நிலையில் சிசிடிவி கேமராக்களின் ஆய்வில் சந்தேகத்துக்கு இடமான நபர் ஒருவர் நடந்து செல்வதும், சிறிது நேரத்தில் அதே நபர் இரு சக்கர வாகனத்தில் அப்பகுதியில் இருந்து வெளியேறுவதும் சிசிடிவி காட்சியில் கண்டெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த வாலிபரை தேடி வந்த நிலையில் ஒலிமுகமதுபேட்டை அருகே அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறை விசாரணையில் ஒலிமகமது பேட்டையை சேர்ந்த தரணிதரன் ( 22) என்பதும் , ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து கொண்டு இரவு நேரங்களில் இது போன்ற திருட்டுத் தொழில் செய்து வந்ததாகவும் தெரிய வந்து அவரிடம் இருந்து ஏழு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஏர்கன் வைத்திருந்ததாக எழுந்த புகாரில், இவர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.