தனியாகச் செல்லும் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் அளித்த பைக் ஆசாமி கைது

மதுரவாயலில் தனியாகச் செல்லும் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் அளித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்‌;

Update: 2024-05-23 17:07 GMT

கைது செய்யப்பட்டவர் 

மதுரவாயலில், இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை குறிவைத்து, இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர் ஒருவர் பாலியல் சீண்டல் அளிப்பதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்துள்ளது.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரவாயல் அடுத்த எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில், தனியாக நடந்து சென்ற இரண்டு சிறுமிகளுக்கு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டல் அளித்ததாக புகார் எழுந்ததை அடுத்து, மதுரவாயல் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

Advertisement

அந்த வகையில், மதுரவாயல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி, அவற்றை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்தச் செயலில் ஈடுபட்டது ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த மகேஷ் (22) என்பது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர், அவரை கைது செய்த போலீசார் மதுரவாயல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், இத்தகைய செயலில் ஈடுபடுவதற்காக, அவர் 2 இருசக்கர வாகனங்களை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்டவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அந்த இளைஞர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News