கள்ளக்குறிச்சியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
கள்ளக்குறிச்சியில் வரும் 27 (சனிக்கிழமை) மற்றும் 28 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள், ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
Update: 2024-01-25 05:17 GMT
கள்ளக்குறிச்சி வனச்சரக அலுவலர் பசுபதி(பொ) விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 27 (சனிக்கிழமை) மற்றும் 28 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள், ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள், ஏமப்பேர், சின்னசேலம், ஆலத்துார் ஏரி என மொத்தம் 28 இடங்களில் கணக்கெடுப்பு நடத்த வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. வனத்துறை அலுவலர்களுடன் கல்லுாரி மாணவ, மாணவிகளும், தன்னார்வலர்களும் இணைந்து பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடலாம். விருப்பமுள்ளவர்கள் இன்று (25ம் தேதி) வனவர் ரஞ்சிதா 87546 18375, தன்னார்வலர் கீர்த்தி 97106 95389 ஆகியோரை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்தவர்களுக்கு பறவைகளை அடையாளம் காண்பது தொடர்பான பயிற்சி நாளை (26ம் தேதி) அளிக்கப்படும். கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வனத்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.