பல முதலாளிகளை தொழிலாளிகள் ஆக்கியது பாஜக அரசு - கமலஹாசன்
ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்க்கும் திராவிட மாடல்தான் நல்ல மாடல் இந்தியா பின்பற்ற வேண்டிய மாடல் இதுதான்.எல்லோருக்கும் ஒரு சாதனை பட்டியல் உண்டு ஆனால் யார் பயன் பெற்றார்கள் என்பது தான் முக்கியம். உள்ளூர் பணக்காரனை உலக பணக்காரனாக்குவது சாதனை அல்ல கடைநிலை ஏழையை கரையேற்றுவதுதான் சாதனை. பல முதலாளிகளை தொழிலாளிகள் ஆக்கியது தான் பாஜக அரசின் சாதனை என சூலூரில் நடந்த பிரசாரத்தின் போது கமலஹாசன் பேசினார்.
கோவை சூலூர் பகுதியில் கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் உயிரே, உறவே,தமிழே வணக்கம் என உரையை துவக்கினார்.கோவை வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கவுன்சிலர் ஆகவும் மேயராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் எனவும் 2024 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையை துவங்கும் பொழுது இந்தியா வாழ்க தமிழ்நாடு ஓங்குக தமிழ் வெல்க என்ற கோஷத்துடன் தான் புறப்பட்டதாகவும் தற்பொழுது மன நிறைவுடன் இங்கு நிற்பதாக கூறினார். 80 ஆண்டுகளுக்கு முன்னால் என் தந்தை எந்த காரணத்திற்காக காந்தியின் பின்னாலும் காமராஜர் பின்னாலும் சென்றாரோ அதே காரணங்களுக்காக நானும் புறப்பட்டிருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி என்றவர் உங்கள் மூதாதையரை நினைவு கொள்ளும் நேரம் இது எனவும் சிறைப்பட்டு செக்கிழுத்து வாழ்விழந்து மீட்டுத் தந்த சுதந்திரம் வெள்ளையரை வெளியேற்றிய அந்த தியாகம் இன்று இந்த கொள்ளையர்கள் கையில் நாட்டை கொடுக்கவா? என கேள்வி எழுப்பினார்.
வாய்ஜாலம் பேசுபவர்கள் பேச்சில் மயங்கி விடாதீர்கள் என்றவர் ஒன்றிய பாஜக அரசு மீது என்ன கோபம் என்று என்னை கேட்கிறார்கள் எனக்கு யார் மீதும் கோபமும் கிடையாது நாம் நன்றாக இருக்க வேண்டும் அதற்கு வழி செய்கின்ற அனைவருக்கும் வணக்கம்,வந்தனம் சொல்வோம் அதற்கு மாறாக செய்பவர்கள் நமக்கு விரோதிகள் கூட அல்ல வேண்டாதவர்கள் என விமர்சித்தார். ஜனநாயகம் என்பது என்ன என்று யோசித்துப் பாருங்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பு அவரவர் உரிமை அவரவர் மதம், கடவுள்,உணவு,உடை என்று அனைவருக்கும் சமமான நீதி வழங்குவது தான் ஜனநாயகம். உலகின் மிகப்பெரிய தேர்தல் இது என தெரிவித்தவர் 97 கோடி பேர் வாக்களிக்க போகிறார்கள் எனவும் இது இரண்டாவது சுதந்திரப் போர் என்று கூறினால் மிகையாகாது என தெரிவித்தார்.
19ஆம் தேதி நீங்கள் சரியான முடிவு எடுத்தால் நமக்கு ஜூன் 4ஆம் சுதந்திர நாள் என்பதை மறந்து விடாதீர்கள் என கூறினார். பத்து வருடத்திற்கு முன்பு இருந்த சூலூர் இது அல்ல எனவும் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது தற்பொழுது இங்கு வந்து விமான நிலையம் கொண்டு வருகிறேன் ரயில் விடுகிறேன் என்றெல்லாம் ரீல் விடுவது தேர்தலுக்கு தானே எனவும் 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பொழுது இதை செய்திருக்க வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டை கட்சி பாரபட்சம் பாராமல் படிப்படியாக பல தலைவர்கள் நம்மை முன்னுக்கு கொண்டு சென்ற திராவிட மாடல் இது எனவும் திராவிடர்கள் இயற்றிய மாடல் இது எனவும் தெரிவித்த கமலஹாசன் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகள் கல்லூரிகள் மருத்துவமனைகள் தொழிற்சாலைகள் போக்குவரத்து இதற்கு நிகராக இந்தியாவில் எங்கு தேடிப் பார்த்தாலும் கிடைப்பது கடினம் என தெரிவித்தார்.
21 பணக்காரர்கள் 70 கோடி மக்களின் சொத்தை குவித்திருக்கும் மாடல் பாஜக மாடல் என விமர்சித்த அவர் ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்க்கும் இந்த மாடல்தான் நல்ல மாடல் இந்தியா பின்பற்ற வேண்டிய மாடல் இதுதான் எனவும் கூறினார்.எல்லோருக்கும் ஒரு சாதனை பட்டியல் உண்டு ஆனால் யார் பயன் பெற்றார்கள் என்பது தான் முக்கியம் என தெரிவித்த கமலஹாசன் உள்ளூர் பணக்காரனை உலக பணக்காரனாக்குவது சாதனை அல்ல கடைநிலை ஏழையை கரையேற்றுவதுதான் சாதனை என தெரிவித்தார். பல முதலாளிகளை தொழிலாளிகள் ஆக்கியது பாஜக அரசு என தெரிவித்த அவர் அமெரிக்கா ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகளை போட்டார்கள் அதேபோல் இங்கும் பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி என்ற இரண்டை போட்டார்கள் அதில் முதலாளியாக இருந்தவர்கள் எல்லாம் தொழிலாளியாகி விட்டார்கள் என்றார்.
இது உங்கள் வாழ்க்கைக்கான போர் எனவும் ஜூன் நான்காம் தேதி விடுதலை கிடைக்க வேண்டும் என்றால் இன்று அதற்கு சிந்தித்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.என்னை இந்தப் பக்கம் திரும்பு அந்தப்பக்கம் திரும்பு என்று கூறுகிறீர்கள் நீங்கள் நல்வழியில் திரும்புங்கள் தமிழகமே உங்களை நோக்கி திரும்பும் நாடே உங்களை நோக்கி திரும்பும் திராவிட மாடலை நோக்கி திரும்பும் அப்படி திரும்பினால் நாளை நமதே எனக் கூறி உரையை முடித்தார்.