சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இரவில் தெப்பத் திருவிழா நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சரித்திர பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் ஒன்று. இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான தெப்ப திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் 10-ம் நாளான நேற்று தெப்ப திருவிழா நடைபெற்றது. இதனை ஒட்டி இரவு 8 மணிக்கு சுவாமியும் அம்பாளும் பெருமாளும் இருதட்டு வாகனத்தில் மேளதாளத்துடன் கோவிலிலிருந்து எழுந்தருளி தெப்பக்குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பக்குளத்தை சுற்றி தீபம் ஏற்றப்பட்டிருந்தது. மூன்று முறை தெப்பம் உலா வந்தது.
அப்போது பாரம்பரிய மரபு படி தெப்ப குளத்தில் முதல் சுற்றை காக்கமூர் இளைஞர்களும், இரண்டாவது சுற்று மேலத்தெரு இளைஞர்களும், மூன்றாவது சுற்று கீழத்தெரு இளைஞர்களும் வடம் பிடித்து வந்தனர். தெப்ப திருவிழா முடிந்தபின் சாமி, அம்பாள், பெருமாள் மீண்டும் தட்டு வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வந்தனர்.
அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருக்கண் சாத்தி வழிபாடு செய்தனர். நள்ளிரவு 12 மணிக்கு திருஆராட்டு விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும் அரங்காவலர் குழுவினரும் பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.