இறந்த மாணவியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

விழுப்புரம் அருகே தவறான சிகிச்சை அளித்ததால் மாணவி இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின் மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2024-01-18 07:00 GMT

 சுபஸ்ரீ 

விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கம் காலனியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45). மீன் வியாபாரி. இவரது மகள் சுபஸ்ரீ (17). இவர் பீமநாயக்கன் தோப்பில் உள்ள பள் ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 15-ந்தேதி மதியம் சுபஸ்ரீ வயிற்று வலி காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் மதியம் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார், இந்த நிலையில் மருத்துவமனை முன்பு திரண்ட மாணவியின் உறவினர்கள், தவறான சிகிச்சை அளித்ததால் தான் சுபஸ்ரீ உயிரிழந்து விட்டார் என்று கூறி அங்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

மேலும் அவசர சிகிச்சை பிரிவு அருகே உள்ள மருத்துவமனை நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த நிலையில் சுபஸ்ரீயின் உடல் நேற்று மதியம் 2 மணி அளவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News