கன்னியாகுமரி தற்கொலை செய்த புதுப்பெண் உடல் ஒப்படைப்பு
திருமணமான 50 நாட்களில் காயத்திரி தற்கொலை செய்திருப்பதால் ஆர்டிஓ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது;
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்த நடராஜ் (27) என்பவர் காயத்ரி (22) என்பவரை கடந்த சுமார் 50 நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி இரவு வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று இருந்த நேரத்தில் தனிமையில் இருந்த காயத்ரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் காயத்ரி உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமணமான 50 நாட்களில் காயத்திரி தற்கொலை செய்திருப்பதால் ஆர்டிஓ விசாரணை நடக்கிறது.
புதுப்பெண் காயத்ரி அனாதை இல்லத்தில் தங்கி இருந்தபோது அவரை நடராஜ் திருமணம் செய்துள்ளார். அவர் அனாதை என கூறப்பட்டது. இதனால் காயத்ரி உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர் படித்த பள்ளிக்கூட சான்றுகளை வைத்து அவரது பெற்றோர் திண்டுக்கல்லில் இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காயத்ரியின் தாயார் சித்ரா மற்றும் உறவினர்கள் கன்னியாகுமரிக்கு வந்தனர். அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.