ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர் உடல் மீட்பு

கூடலூரில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற மணிகண்டன் 38, தண்ணீரில் அடித்து சென்று மாயமான நிலையில் 6 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.

Update: 2024-03-30 08:19 GMT

நீலகிரி மாவட்டத்தில் இருந்து கூடலூர் வழியாக பாயும் பாண்டிடார் - புன்னம்புழா ஆறு கேரள மாநிலம் வரை பாய்கிறது. இந்த ஆற்று நீரை கூடலூர், பந்தலூர் தாலுக்காவில் உள்ள பொதுமக்கள் விவசாயத் தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை பொதுமக்கள் குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை நாடுகாணி பகுதியை சேர்ந்த மணிகண்டன் 38, வாலிபர் தனது நண்பர்களுடன் புன்னம்புழா பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது இரவு என்பதால் மணிகண்டன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். உடனிருந்த நண்பர்கள் மணிகண்டனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இரவு நேரம் என்பதால் காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளிட்ட காரணங்களால் மணிகண்டனை தேடும் பணியை கைவிடப்பட்டு, இன்று காலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின் பாண்டியார்-புன்னம்புழா ஆற்றுப் பகுதியில் இருந்து சுமார் 3கீ.மி., தூரத்தில் மணிகண்டன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் கூடலூர் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News