புத்தகத் திருவிழாவில் ரூ.1.06 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
விருதுநகர் இரண்டாவது புத்தகத் திருவிழாவில் மொத்தம் ரூ.1.06 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன என ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.
விருதுநகர் இரண்டாம் புத்தகத் திருவிழா-2023 கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட்காட்சி மைதானத்தில், கடந்த 16ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது. இதில், தினமும் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
மேலும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தும் அரிதான இசைக்கருவிகள் பலரையும் வெகுவாக கவர்ந்தது.. புத்தக விற்பனையில் ரூ.66,09,084/- மதிப்பில் புத்தக விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும், அரசு பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குவதற்கும், கிராமப்புற நூலகங்களில் வைப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மட்டும் ரூ.40 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனவும், மொத்தம் இந்த இரண்டாவது புத்தக திருவிழாவில் ரூ.1,06,09,084/- மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.