வீட்டு முகவரியை மறந்த சிறுவன்: போலீசார் மீட்பு
சைக்கிள் விளையாட்டின் போது வீட்டு முகவரியை மறந்த சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Update: 2024-04-25 01:12 GMT
பூவிருந்தவல்லி அடுத்த குமணன்சாவடி பேருந்து நிலையம் அருகே 5 வயது சிறுவன் ஒருவன், தனது வீடு எங்குள்ள என்று தெரியாமல் நீண்ட நேரமாக சைக்கிளில் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்துள்ளான். அதனைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அந்த சிறுவனை பிடித்து ஏன் இங்கு சுற்றித்திரிகிறாய்? உனது வீடு எங்கே உள்ளது? என விசாரித்துள்ளார். ஆனால், அந்த சிறுவனால் தாத்தா.. தாத்தா என்ற சொல்லத்தை தவிர வேறு எந்த வார்த்தையும் சொல்ல முடியவில்லை எனவும், மேலும், வீட்டு முகவரியைக் கேட்டபோதும், சிறுவனுக்கு தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. அதனால், சிறுவன் சைக்கிளை ஓட்டிச் சென்றால், வீட்டிற்குச் சென்று விடுவான் என ஆட்டோ ஓட்டுநர் சிறுவன் பின்னாலேயே சிறிது தூரம் ஆட்டோவில் சென்றுள்ளார். ஆனால், அச்சிறுவனுக்கு வீடு இருக்கும் வழி தெரியாததாலும், வீட்டு முகவரியையும் சொல்ல முடியாததாலும் ஆட்டோ ஓட்டுநர் பூவிருந்தவல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் வந்த பூவிருந்தவல்லி போலீசார், சிறுவன் யார்? அவனது முகவரி என்ன என விசாரணை மேற்கொண்டனர். மேலும், அனைத்து காவல் நிலையத்திற்கும் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தனர். அப்போதும் சிறுவனின் முகவரி கிடைக்காத நிலையில், ஒருவர் தனது மகனைக் காணவில்லை என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தது தெரிய வந்துள்ளது. அதனையடுத்து, அவர்களிடம் காணாமல் போன சிறுவனின் விவரம் மற்றும் அடையாளங்களை போலீசார் தெரிவித்த போது, அந்த தம்பதியினர் அது தனது மகன் தான் எனத் தெரிவித்துள்ளனர். பின்னர், சிறுவனின் பெற்றோரை காவல் நிலையம் வரவழைத்த போலீசார், கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு சிறுவனை ஒப்படைத்துள்ளனர். தற்போது, வீட்டிலிருந்து சைக்கிள் ஓட்டியபடி வந்த சிறுவன் வீட்டின் முகவரியை மறந்து தவித்த போது, ஆட்டோ ஓட்டுநரின் உதவியால் சிறுவனை மீட்ட போலீசார் 2 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.