பெண்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி தேர்தல் புறக்கணிப்பு
சாத்தான்குளம் அருகே மகளிர் உரிமைத்தொகை வழங்காததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Update: 2024-03-13 05:05 GMT
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஆத்திக்காடு கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை அதிகமான குடும்பத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த மாதம் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று முறையிட்டனர். அப்போது அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் மகளிர் உரிமைத்தொகை வரவில்லை. இதற்கிடையில் கடந்த வாரம் சாத்தான்குளம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதற்கு கோட்டாட்சியரிடம் சென்று முறையிடும் படி கூறினார். இதனால் ஆத்திமடைந்த ஆத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று கிராமத்தின் முக்கிய வீதியில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்காத தமிழக அரசை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு என்ற பலகை வைத்து அதன் அருகே கருப்பு துணியால் தங்களது கண்களை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.