கோவில் கதவை உடைத்து நகை திருட்டு
கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோடு பகுதியில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகர் அடுத்த ஆலங்கோடு பகுதியில் புகழ் பெற்ற ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் காலை மாலை அதிகமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். தினமும் அர்ச்சகர் கிருஷ்ணன் நாயர் (75) காலை மாலை வேளைகளில் கோயில் நடை திறந்து பூஜை செய்து செல்வது வழக்கம். நேற்று மாலை பூஜையை முடித்து கோயில் கதவுகளை மூடி சென்ற அர்ச்சகர் இன்று காலை மீண்டும் கோயிலுக்கு வந்த போது கோயில் கருவறை முன் வைக்கப்பட்டிருந்த உண்டியல் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் அம்மனின் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் நகை, ரூபாய் பத்தாயிரம் திருட்டு போயிருந்ததும் தெரியவந்தது. திருட்டு குறித்து கோயில் நிர்வாகி பாலையா இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். தொடர் விசாரணையில் அதிகாலையில் கோயில் வளாகத்தில் புகுந்த மர்ம நபர் கோயில் கதவை உடைத்தது தெரியவந்தது. இது குறித்து இரணியல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.