கிள்ளனுாரில் பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
கிள்ளனுாரில் பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய பலே ஆசாமியை 11 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய பலே ஆசாமியை 11 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கிள்ளனுாரை சேர்ந்தவர் ராஜகோபால்,53; ஓட்டல் நடத்தி வருகிறார். இவர், கடந்தாண்டு ஜூன் 16ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். அன்று பகல் 12 மணிக்கு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 19 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் திருச்சி மாவட்டம் எடமலைபட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் சுதாகர்,27; என்பதும், இவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ராஜகோபால் வீட்டில் திருடியதும், இவர் மீது எடமலைபட்டியில் ஒரு கொலை வழக்கு, ஈரோட்டில் 4 திருட்டு வழக்கு மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளது தெரிய வந்தது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்து, 10 சவரன் நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை உளுந்துார்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.