கார் மீது மோதிவிட்டு தரக்குறைவாக பேசிய விவகாரம்: பஸ் டிரைவர் பணி இடைநீக்கம்!!
சேலம் வந்த அரசு பஸ் கார் மீது மோதிவிட்டு அதனை ஓட்டி வந்தவருக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பஸ் டிரைவர் செல்வக்குமார், கண்டக்டர் ரெஜினால்டு (55) ஆகிய 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் பொன்முடி நேற்று உத்தரவிட்டார்.
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் அருண்மணி. தொழில் அதிபரான இவர், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அழகாபுரம் போலீஸ் நிலையம் முன்பு உள்ள சிக்னல் அருகில் சாலையோரம் தனது காரை திருப்பினார். அப்போது, ஏற்காட்டில் இருந்து சேலம் வந்த அரசு பஸ், அவரது கார் மீது மோதியது. இதனால் கார் லேசாக சேதம் ஆனது.
இதுபற்றி அறிந்த அருண்மணி, பஸ் டிரைவரான செல்வக்குமார் (வயது 45) என்பவரிடம் சாலையோரம் நின்ற கார் மீது இப்படி மோதிவிட்டீர்களே? என்று கேட்டுள்ளார். அதற்கு டிரைவர் செல்வக்குமார் ஆத்திரம் அடைந்து அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அருண்மணி இது குறித்து சேலம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் பொன்முடியிடம் புகார் மனு அளித்து சம்பந்தப்பட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக்கொண்டார். அதன்பேரில், விபத்து நடந்தபோது யார் மீது தவறு என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து கார் மீது மோதிவிட்டு அதனை ஓட்டி வந்தவருக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பஸ் டிரைவர் செல்வக்குமார், கண்டக்டர் ரெஜினால்டு (55) ஆகிய 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் பொன்முடி நேற்று உத்தரவிட்டார்.