வணிகர் சங்கம் சார்பில் வேட்பாளர்கள் சந்திப்பு கூட்டம்
குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் பேரமைப்பு சார்பில் நடந்த வேட்பாளர் சந்திப்பு கூட்டத்தில் கும்பகோணம் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து கோரிக்கைள் எழுப்பப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் 2024,முன்னிட்டு குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு & பேரமைப்பு சார்பில் வேட்பாளர்கள் சந்திப்பு கூட்டம் கும்பகோணம் T. S. R பெரிய தெருவில் உள்ள ஸ்ரீ பாலாஜி கிராண்ட் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் சோழா. சி. மகேந்திரன் தலைமை வகித்தார், செயலாளர் வி. சத்திய நாராயணன் வரவேற்புரை ஆற்றினார், துணைத் தலைவர்கள் பா. ரமேஷ்ராஜா, வேதா. ராமலிங்கம் பொருளாளர்கள் த. மாணிக்கவாசகம் மு. கியாசுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பா. ஜ. க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் ம. க. ஸ்டாலின் மற்றும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ப. பாபு சார்பில் அவரது தந்தையும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பூம்புகார் புவுன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மற்றும் கும்பகோணம் பகுதியில் மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட வேண்டிய மிக முக்கிய திட்டங்கள் குறித்து வேட்பாளரிடம் கோரிக்கை படிவம் அளிக்கப்பட்டது. பாரம்பரிய கலாச்சார தொன்மை வாய்ந்த கும்பகோணம் நகரத்தை மத்திய அரசின் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும். விழுப்புரம் முதல் தஞ்சாவூர் வரையிலான மெயின் லைன் இரயில் பாதையில் இரண்டாவது பாதையை உடனடியாக அமைக்க வேண்டும். ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து திட்ட மதிப்பீடுகள் அளிக்கப்பட்டு இரயில் வாரியத்தின் அனுமதி வேண்டி நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கும்பகோணம் - ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் - இணைப்பு நீடாமங்கலம் வரையிலான புதிய இரயில் பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
திருநாகேஸ்வரத்தில் உபரியாக உள்ள இரயில்வே நிலப்பகுதியில் இரயில் பெட்டிகள் பராமரிப்பு முனையம் அமைக்க வேண்டும். ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தி அதன் மூலம் தொழில் வணிகத்தை அபிவிருத்தி செய்யும் வகையில் நவக்கிரஹ ஸ்தலங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்க ஏதுவாக மெட்ரோ ரெயில் அல்லது மோனோ ரெயில் அல்லது இரயில் வட்டப்பாதை திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மயிலாடுதுறை - தரங்கம்பாடி வரை தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ள பழைய இரயில் பாதையை மீண்டும் புதுப்பித்து காரைக்கால், திருநள்ளாறு வரை புதிய இரயில் பாதை அமைக்க வேண்டும்.
தஞ்சையிலிருந்து புதுடெல்லிக்கு " செங்கோல் " எனும் பெயரில் அதிவேக இரயில் இயக்கவேண்டும். விழுப்புரம் / மயிலாடுதுறை தஞ்சாவூர்/மயிலாடுதுறை வரை பகுதியாக இயக்கப்படும் இரயில்கள் அனைத்தையும் தஞ்சாவூர் முதல் விழுப்புரம் வரை நேரடியாக இயக்க வேண்டும். வாரம் மூன்று நாட்கள் மட்டுமே இயங்கி வரும் இராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரெயில் தினசரி இரயிலாக இயக்க வேண்டும். சரக்கு சேவை வரி அமலாக்கத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை கலைந்து வரி வரம்பு 18 % சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வணிகர்களின் கொள்முதல் கடனை திரும்ப செலுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள கால வரம்பை நீக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் பேரமைப்பில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் தஞ்சை மாவட்ட இரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் அ. கிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கூட்ட நிறைவாக துணைச் செயலாளர் வேதம். முரளி நன்றி கூறினார்.