பெண் மீது தாக்குதல் - 4 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடி பகுதியில் பெண் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் மெசியாதாஸ். இவர் அந்த பகுதியில் மரக்கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் அனீஸ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று பகல் அனீஸ் கடையில் உள்ள ரூபாயை கொடுக்க மெசியா தாஸ் வீட்டிற்கு சென்றார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சிவசக்தி (45) என்பவர் அனீசை செல்போனில் போட்டோ எடுத்தாராம். இதனை மேசியா தாஸின் மனைவி இசபெல் புஷ்பராணி என்பவர் தட்டி கேட்டாரர் . இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்த தகவல் அறிந்த சிவசக்தியின் மகன் அஸ்வந்த் என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று தாயுடன் சேர்ந்து இசபெல் புஷ்பராணியை கையால் தாக்கி வெட்டு கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து இருதரப்பினர்களுடைய மோதல் ஏற்பட்டது. இதில் இசபெல் புஷ்பராணி, சிவசக்தி ஆகியோர் குளச்சல் போலீசில் தனித்தனியாக புகாரளித்தனர். போலீசார் இருதரப்பை சேர்ந்த சிவசக்தி, அஷ்வந்த், பெர்சிலின், ஜாக்சன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து, அஸ்வந்த் மற்றும் ஜாக்சன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் சிவசக்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.